பிரான்ஸிலிருந்து வெளிவரும் ’தமிழ் நெஞ்சம்’ இதழும் ‘உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்க்ள் மன்றமும்’ இணைந்து நாளை ( 1.2.2.2020 ) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் எழும்பூர் இக்ஷா அரங்கத்தில் ஹைக்கூ திருவிழாவைக்கொண்டாடுகின்றன. விழாவிற்கு ஆரூர் தமிழ்நாடன் தலைமை ஏற்க, தமிழ் நெஞ்சம் அமீன், குமரன் அம்பிகா, ’வடசென்னைத் தமிழ்ச்சங்கம் ‘ எ.த.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகிக்க, கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் வரவேற்புரை ஆற்றுகிறார். கவிஞர்கள் சாரதா சந்தோஷும் பாரதி பத்மாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில், ஜப்பானைச் சேர்ந்த ஹைக்கூ பிதாமகன் ’பாஷோ’ பெயரிலான விருது கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. மேலும் நஸீரா ஆபிதீனுக்கு ’மணிக்கூ’ விருதும், ராம்ஜி உலகநாதனுக்கு ‘கவித்தென்றல்’ விருதும் வழங்கப்படுகின்றன.
இந்த விழாவில், சர்வதேச அளவிலான 101 கவிஞர்களின் ஹைக்கூக்கள் அடங்கிய ‘ஹைகூ 2020’ என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூலை கவிஞர்கள் அனுராஜும், தமிழ்நெஞ்சன் அமீனும் சிறப்பாகத் தொகுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலோடு, நஸீரா ஆபிதீன் எழுதிய ’ஹைக்கூவில் கரைவோமா?’ , நிர்மலா சிவராச சிங்கம் எழுதிய ’ஓடை நிலவு’, செல்லம் ரகுவின் ’இனியெல்லாம் சுகமே’, மற்றும் அன்புச்செல்வி சுப்புராஜ் எழுதிய ’துளிர்க்கும் மரம்’, கே.ராம்ஜி உலகநாதன் எழுதிய ’கொழுந்தம்மா’, கவிரிஷி மகேஷ் எழுதிய ’என் கவி ஓடம்’, மாதவனின் ’சுகமூட்டிய நிழல்’ ஆகிய நூல்களும் வெளியிடப்படுகின்றன.
ஹைக்கூ முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் அமுதபாரதி தலைமையில், சிறப்பு ஹைக்கூ கவியரங்கமும் நடக்கிறது. விழாவில் கவிஞர்கள் அனுராஜ், ரசி குனா, ரமேஷ், இளையபாரதி, உதயகண்ணன், தஞ்சை எழிலன் உள்ளிட்டோர் கவிதைகளையும் வாழ்த்துரையையும் வழங்க, நிறைவாக கவிஞர் ஈரோடு தமிழன்பன் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
.