கரோனா நோய் தொற்றால் எத்தனை முன்களப் பணியாளர்கள் பணியாற்றினாலும், அவர்கள் ஒவ்வொருவருடைய சேவையும் பலரது உயிரை காப்பாற்ற உதவுகிறது. அதன் வகையில் காவல்துறையும் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் இந்த கரோனோ காலத்தில் தருகிறது. இருப்பினும் அவா்களும் மனிதா்கள் என்பதால் 12 மணி நேரத்திற்கும் அதிகமான பணி சுமையும், அதனால் மன அழுத்தமும் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அதிலும் பெண் காவலர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. 24 மணி நேரத்தில் 3 பிரிவாக பிரித்து சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு பிரிவாக பிரித்து 2 சுழற்சி முறை தான் என்பதால் பணி நேரம் அதிகரிப்பதோடு, உடல்சோர்வு, மன அழுத்தம் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
3 பிரிவாக பணி சுழற்சியை பிரித்தால் பணிசுமை குறையும் என்றும், நகரம் முழுவதும் 100க்கும் அதிகமான இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்து அவர்களுக்கு அறிவுரை கூறி, பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகிறோம். மேலும் தொடர்ந்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் புலம்புகின்றனர்.
மேலும் காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதோடு பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே இந்த பற்றாக்குறைகளை சமாளிக்க அதிகாரிகளும் பணியில் இருப்பவர்கள் மீது அதிக அளவில் பணி சுமையை சுமத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சமாளிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது புதிய ஊரடங்கு விதிமுறைகள் செயல்படுத்தபட்டுள்ள நிலையில், கட்டாயம் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். புதிய ஊரடங்கு செயல்பட்டுப்பட்ட நேற்று ஒருநாள் மட்டும் சுமார் 800க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காவல்துறையின் நிலையையும் சற்று புரிந்து கொண்டு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தினால், மன அழுத்தம் இல்லாமல் பணியாற்றிட முடியும் என்றும், ஓய்வு என்பது அவசியம் தேவை, கொஞ்ச நேர ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றினால் எங்களுடைய உடல்நிலையும் மோசமடையும் என்றும் தெரிவித்துள்ளனர்.