வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் விவசாயிகள் பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி பேட்டி அளித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் குண்டியமல்லூர், ஆதிவராகநல்லூர், மஞ்சக்கொல்லை விருதாச்சலம், வெலிங்டன் ஏரி, மேமாத்தூர் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த ககன்தீப்சிங் பேடி, "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முழு அளவில் தயார் படுத்தப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள நிரந்தர வெள்ள தடுப்பு திட்டங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. வெள்ள பாதிப்பிலிருந்து கடலூர் பகுதியை பாதுகாக்க அருவாமூக்கு திட்டம் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அந்த திட்டத்திற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தின் முலம் கடந்த 2.1/2 ஆண்டுகளில் 1500 கோடி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தங்கள் பயிர் பாதுகாப்பினை உறுதி செய்திட விவசாயிகள் அனைவரும் உடனடியாக பயிர் காப்பிட்டு பிரிமியம் கட்டி எதிர்வரும் மழையின் பாதிப்பில் இருந்து மீளலாம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்காசோளம் பயிர் செய்த விவசாயிகள் பூச்சி தாக்குதலால் சோளப்பயிர்கள் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. அதனை தடுத்திட தமிழக அரசு தற்போது 47 கோடி ருபாய் பூச்சி கொல்லிக்காக 2 ஸ்பிரே முலம் தடுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அதனை குழுக்களாக பதிவு செய்து பயன் பெற வேண்டும் " என்றார்.