அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று (16/06/2022) தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும், ஒற்றைத் தலைமைக் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், ஆலோசனை முடித்துக் கொண்டு, வெளியே வந்து காரில் ஏறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காரை முற்றுகையிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருகை புரிந்தார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடன் வந்தனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, வைத்திலிங்கம், பொன்னையன், ஆர்.பி.உதயக்குமார், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இக்கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் பொன்னையன், "ஒற்றைத் தலைமைக் குறித்து கட்சிதான் முடிவெடுக்கும், கட்சியின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு. கண்ணும், இமையும், நகமும், சதையும் போல ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். இணைந்து செயல்படுகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்டாயம் நடைபெறும். ஒற்றைத் தலைமைக் குறித்து ஆலோசிக்கப்படவில்லை, இரட்டை தலைமையே இருந்து வருகிறது" என்றார்.
இதனிடையே, கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாறிமாறி சுவரொட்டிகளை ஒட்டி வருவது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.