6 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவத்தினால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை, பாரதி நகரில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேலும் பாரதி நகரில் குழந்தைகளுக்கான பால்வாடியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக பாரதி நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அங்கு வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து கொன்று வருகிறது.
இந்நிலையில் பாரதி நகரை சேர்ந்த உதயராஜா என்பவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தோட்டத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பட்டியில் இருந்த ஆடுகளை கடித்துக் குதறின. இதில் 6 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. 4 ஆடுகள் படுகாயத்துடன் கிடந்தன.
இன்று காலை வழக்கம் போல் தோட்டத்திற்கு வந்த உரிமையாளர் ஆடு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,'எங்கள் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒன்றாக சுற்றித் திரிகின்றன. நாங்கள் வளர்க்கும் கால்நடைகளையும் கடித்துக் கொன்று விடுகிறது. சில சமயம் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது எங்களை பின் தொடர்ந்து துரத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியைக் கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. மேலும் எங்கள் பகுதி குழந்தைகள் வெளியே வர பயப்படுகின்றனர். ஏற்கனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தற்போது மேலும் 6 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்று உள்ளன. எனவே இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.