கேரளாவில் சில வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சில தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய நபர் ஒருவரை என்.ஐ.ஏ சத்தியமங்கலத்தில் வைத்துக் கைது செய்துள்ளது.
என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நிகழ்த்த இருந்த பயங்கரவாதத் தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. சோதனையில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கேரளாவில் சில வழிபாட்டுத்தலங்கள், சில சமூகத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் கேரளாவில் இதற்கான கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ள என்.ஐ.ஏ., தமிழகத்தில் சத்தியமங்கலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் ஆசிப் என்பவரைக் கைது செய்திருப்பதாகவும், ஆசிப் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 19 ஆம் தேதி திருச்சூர் மாவட்டத்தில் மூன்று இடத்திலும், பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.