புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளை (நவம்பர் 20, 2018) நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில் புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) செல்லலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் மாலை வரை நீடிக்கிறது. இங்கிருந்து புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு 350 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். அவற்றையெல்லாம் பார்வையிட வேண்டுமானால் ஒரு நாள் முழுதாக வேண்டும்.
சேலத்தில் புதிய பாலம் திறப்பு விழா, நாமக்கல் மாவட்டத்தில் புதிய கட்டட திறப்பு விழா, மருத்துவமனையில் மருத்துவ உபகரண துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. அவற்றை எல்லாம் முடித்துவிட்டு, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் செல்ல போதிய கால நேரம் இல்லை. அதனால் இன்றைய தினம் அங்கே செல்வதை தவிர்த்து, வரும் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 20) காலையிலேயே நேரமாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இருக்கிறேன்.
ஆரம்பத்தில், நிவாரண முகாம்களில் குறைந்த அளவில்தான் மக்கள் தங்கி இருந்தனர். கிராம பகுதிகளில் மின்கம்பங்கள் அதிகளவில் சாய்ந்து உள்ளன. அவற்றை ஒரே நாளில் சரிசெய்துவிட முடியாது. பழுதடைந்த மின்கம்பங்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்ட பிறகுதான் மின்விநியோகம் வழங்கப்படும். அதனால்தான் முகாம்களில் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது மிகப்பெரிய சேவை. கிராமப்புற பகுதிகளில் பல லட்சம் மரங்கள் விழுந்து சேதம் அடைந்துள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் மனிதாபிமான முறையில் உதவிட வேண்டும். நம் குடும்பத்தில் உள்ளவர் பாதிக்கப்பட்டதுபோல் கருதி, அவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.