சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் ரயில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மாலை புறப்பட்டது. சேலம் மாவட்டம் வீரபாண்டி ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ஏறிச்சென்றது. இதனால் ரயில் இன்ஜினில் சத்தம் கேட்டது.
இதையறிந்த ரயில் இன்ஜின் பைலட் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனே சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும், ஈரோடு ரயில்வே காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வீரபாண்டிக்கும், மகுடஞ்சாவடிக்கும் இடையே ரயில்வே தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறுவர்கள் வைத்து சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கந்தம்பட்டி ரயில் தண்டவாளத்தில் சிறுவர்கள் கற்கள் வைத்து விளையாடினர்.
இதையறிந்த காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர். அதேபோல், தற்போதும் சிறுவர்கள் தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாடி இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.