திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஈரோடு மாணிக்கம்பாளையம் விஐபி நகரில் ஒரு வீடு உள்ளது. இதேபோல் மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரம் கிராமம் மினிகாடு என்ற இடத்தில் 25 ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவை விட்டு விலகினார்.
தற்போது எந்த ஒரு இயக்கத்திலும் சேராமல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சுப்புலட்சுமி ஜெகதீசன் வாரத்தில் இரண்டு நாட்கள் குடும்பத்துடன் இந்தப் பண்ணை வீட்டில் தங்குவது வழக்கம். சின்னம்மாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தோட்டத்தை கவனித்து வருகிறார். தோட்டத்தில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் வழக்கம்போல் பண்ணை வீட்டைப் பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வரும் நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த சந்திரசேகர் அந்த வழியாக சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் கணவர் ஜெகதீசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெகதீசன் மற்றும் போலீசார் வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டில் டேபிள் டிராயரில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பணம் தோட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருப்பது என தெரிய வந்தது. வீட்டில் வேறு பெரிய அளவில் பணம், நகைகள் வைக்கவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.