தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் நேற்று மாலை (12.09.2023) பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அனைத்துத் தரப்பினர் நலனையும், பாதுகாத்து வருகின்ற அரசுதான் திமுக அரசு. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முதல், சமூக மேம்பாட்டிற்காக சமூக நீதியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கு வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவியரின் வேலை வாய்ப்புக்கான தனித்திறனை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம். ஏழை, எளிய பெண்களின் மாதாந்திரச் செலவில் குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி வரும் விடியல் பயணத்திட்டம். பெண்கள் உயர்கல்விக்கு செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டம். பள்ளிகளுக்கு வரக்கூடிய குழந்தைச் செல்வங்கள் பட்டினியுடன் வரும் இந்த செல்வங்களுடைய பசியை ஆற்றி வரக்கூடிய காலை உணவுத்திட்டம். ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின் பொருளாதாரத் தற்சார்பை உறுதிப்படுத்தக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். இப்படி திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இந்தத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு அதாவது செலவை எல்லாம் கூட நாங்கள் செலவினங்களாக பார்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக நாங்கள் பார்க்கின்றோம்.
அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. கலைஞர் பெயரால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கப் போகின்றோம். இன்னும் சொல்லப்போனால், இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை கொடுக்கவில்லை; உரிமையை கொடுக்கின்றோம். அதுதான் முக்கியம். அதனால்தான் கலைஞர் அவர்கள் மகளிருக்கு சொத்தில் சம உரிமை அளித்து அவர்களுடைய சுய மரியாதையை காப்பாற்றி இருக்கிறார். இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும். இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள். இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஏழை. எளிய பெண்களுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவை இல்லாத பொருளாதார விடுதலையையும் இந்தத் திட்டம் நிச்சயமாக அளிக்கப் போகின்றது” என தெரிவித்தார்.