Skip to main content

தூத்துக்குடியை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்! ராமதாஸ்

Published on 25/03/2018 | Edited on 26/03/2018

 

rms

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 42-ஆவது நாளை எட்டியிருக்கிறது. ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து மக்கள்  நடத்திய கடையடைப்பு மற்றும் ஒன்றுகூடல் போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அழிவுக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அப்பேரழிவு ஆலையை மேலும் 600 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு அனுமதி கொடுத்தன என்பது தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் குமரெட்டியபுரம் பகுதி பொதுமக்கள் ஏற்கனவே இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தங்களது பகுதியில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால் இன்னும் கொடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் தான், வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டன் உள்ளிட்ட நகரங்களிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் பினாமி அரசுக்கு மக்களின் போராட்டம் குறித்து அக்கறை இல்லை. அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்கக்கூட தோன்றவில்லை.

 

ஸ்டெர்லைட் ஆலை 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது எத்தகைய விதிமீறல்கள் அரங்கேற்றப் பட்டனவோ, அதை அனைத்தும் இப்போதும் செய்யப்படுகின்றன. ஆலை விரிவாக்கத்திற்காக உரிய அனுமதிகள் பெறப்படவில்லை. அதைவிட முக்கியமாக சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய இத்தகைய ஆலைகளை தொடங்குவது மற்றும் விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, பொதுமக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டும் தான் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், அத்தகைய கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தாமலேயே ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டதற்கு பிந்தைய கடந்த 22 ஆண்டுகளில் அந்த ஆலையால் ஏற்பட்ட அழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல. 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் கொல்லப்பட்டாலும் இருவர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்குக் காட்டப்பட்டது. 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தொடர்ந்து 2.3.1999 அன்று ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர்  மயங்கி விழுந்தனர். தொடங்கப்பட்ட நாள் முதல் 2013&ஆம் ஆண்டு வரை  82 முறை நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இன்று வரை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். 1994 முதல் 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாற்றுகின்றனர்.

 

ஸ்டெர்லைட் ஆலையின் தீய விளைவுகளை உணர்ந்ததால் தான் அந்த ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. 2013&ஆம் ஆண்டில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவைத் தொடர்ந்து இந்த ஆலையை தமிழக அரசு மூடியது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தயவால், சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டுத் தான் இந்த ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இத்தகைய பேரழிவு விரிவுபடுத்துவதற்கு ஆட்சியாளர்களுக்கு எப்படி மனம் வந்தது? பினாமி ஆட்சியில் பணம் பத்தும் செய்யும் என்பது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை உறுதியாகியிருக்கிறது.

 

ஸ்டெர்லைட் ஆலையில் ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டால் 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை, சிறுநீரகக்கல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆலையை விரிவுபடுத்த அனுமதிப்பது அப்பகுதியில் வாழும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்வதற்கு சமமான செயலாகும். இதை அரசே செய்யக்கூடாது. எனவே, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு கொடுத்த அனுமதியை அரசு ரத்து செய்வதுடன் முதன்மை ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தையும் திரும்பப் பெற்று அதை உடனடியாக மூட வேண்டும்.’’

சார்ந்த செய்திகள்