விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, நான்குவழிச் சாலையில் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், பா.ஜ.க. கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இந்த அலுவலகத்தைக் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய அம்சமாக, இவ்வலுவலக வளாகத்தில் கருங்கல்லாலான பாரதத்தாய் சிலையை, 7-ஆம் தேதி காலையில் நிறுவி, பூர்வாங்கப் பணிகளைத் தொடர்ந்தனர்.
வரும் 9, 10, 11 ஆம் தேதிகளில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்.. என் மக்கள்’ பாதயாத்திரை பயணம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், விருதுநகர் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர், காவல்துறையினரோடு பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் வந்தனர். “அனுமதி பெறாமல் வைத்த சிலையை உடனடியாக அகற்றவேண்டும்” என்றனர். பா.ஜ.க.வினரோ “எங்கள் பட்டா நிலத்தில்தான் சிலை வைத்திருக்கிறோம். அகற்ற முடியாது” எனக் கூறினர்.
பா.ஜ.க. மாநிலச் செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “தற்போதைக்கு சிலையை மூடிவைத்துவிடுவோம். நாளை முறைப்படி அனுமதிகேட்போம்” எனப் பேசி முடிவெடுத்து, சிலையைத் துணியால் மூடினார்கள். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் அங்கிருந்து சென்றனர்.
அன்றிரவு 12 மணிக்கு மேல் பாஜக அலுவலக வளாகத்தைச் சுற்றிக் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அந்த அலுவலக கேட் நவீன இயந்திரம் கொண்டு அறுக்கப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளர்களை வைத்து அங்கிருந்த பாரத மாதா சிலையை அப்புறப்படுத்தியதோடு, வாகனத்தில் ஏற்றி தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர்.
இதனால் கொந்தளித்த பா.ஜ.க.வினர், “மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதைத் தடுப்பதற்காகவே, தி.மு.க. தூண்டுதலின் பேரில் அரசுத்துறையினர் செயல்படுகின்றனர். அண்ணாமலை நடைப்பயணத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது. நடந்த அத்துமீறலுக்கு காவல்துறை பதில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் பாரதத்தாய் சிலை வைப்பதற்கு உரிமை இல்லை. இது ஆட்சியாளர்களின் அவலத்தைக் காட்டுகிறது. பாரதத்தாய் நீதித்தாயாக மாறுவாள். தேசத் துரோகிகளுக்கு தண்டனை கொடுப்பாள். அது விரைவில் நடக்கும். தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்” எனக் கூறி கோஷமிட்டனர்.