குமரி மாவட்டம், குளச்சல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குளச்சல் அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா். அதே போல் உள் நோயாளிகளாக 100க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இங்கு வரும் நோயாளிகளில் 60 சதவிதத்தினா் கடற்கரையை ஓட்டியுள்ள மீனவ கிராம மக்கள்.
இவா்களில் பெரும்பாலானோர் கர்ப்பிணி பெண்களாக உள்ளனா். இங்கு பொது மருத்துவா், மகப்பேறு பெண் மருத்துவா், எலும்பு முறிவு மருத்துவா் மற்றும் குழந்தைகள் நல மருத்துவா் மற்றும் உண்டு உறைவிட மருத்துவர் என பணியில் இருக்க வேண்டும். ஆனால் சமீப காலமாக ஒரே ஒரு மருத்துவரை கொண்டு தான் இந்த மருத்தவமனை செயல்படுகிறது. அந்த மருத்துவரே தான் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார். இது நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்டுத்தி உள்ளது.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க சமீப காலமாக பெண் மருத்துவா் இல்லாததால் அந்த பெண்கள் 12 கி.மீ. தூரத்தில் இருக்கும் கருங்கல் அரசு மருத்துவ மனைக்கு செல்கிற அவதி நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் விபத்தில் சிக்கியவா்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவு கூட சரியாக இல்லை. மேலும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமலும் உள்ளது.
இது சம்மந்தமாக கடந்த மாதம் மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சியரிடம் நோயாளிகளும், அவர்களது உறவினா்களும் புகார் தெரிவித்தபோது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார். ஆனால் எந்த நடவடிக்ககையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மருத்துவமனையில் உடனடியாக மருத்துவா்களை நியமிக்கவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தி இன்று குளச்சல் சட்டமன்ற உறுப்பினா் பிரின்ஸ் அந்த பகுதி மக்களோடு சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மருத்துவமனை முன் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாகவும் கூறியுள்ளார்.