அமெரிக்கா, மேரிலாந்தில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ள அம்பேத்கரின் 19 அடி சிலையை நிறுவப்படவுள்ளது.
கடந்த 1891 ஆண்டு ஏப்ரல் 14, ஆம் தேதி பிறந்த டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர் அரசியலமைப்புச் சபையின் மிக முக்கியமான வரைவுக் குழுவின் தலைவராக இருந்து, இந்திய அரசியலமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினார். இதனால், ‘இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி’ என பெருமையாக அழைக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர். தனது இறுதி மூச்சு வரை இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய சமூக இயக்கங்களில் அம்பேத்கர் தனிச் சிறப்பு மிக்கவர். இப்படியாகத் தனது வாழ்க்கை முழுவதும் படிப்பு, சமூகப் பணி என உழைத்தவர் இறுதியாக அம்பேத்கர் டிசம்பர் 6, 1956 அன்று இறந்தார்.
இந்த நிலையில், மேரிலாந்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (ஏஐசி) 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை அக்டோபர் 14 தேதி திறக்க உள்ளனர். 19 அடி உயரம் என சொல்லப்படும் இந்த சிலையை, ராம் சுதார் என்ற புகழ்பெற்ற சிற்பியை வைத்து வடித்துள்ளனர். இவர் இதற்கு முன்பாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிலை குறித்து அம்பேத்கர் சர்வதேச மையம் (ஏஐசி) கூறுகையில், “இதுதான், இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் நிறுவியுள்ள பாபாசாகேப்பின் மிகப்பெரிய சிலை. மேலும் இந்த மையத்தில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் நினைவகத்தின் ஒரு பகுதியாகவும் இது நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான அம்பேத்கரிய இயக்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் இந்த சிலை திறப்பு நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் கருத்துகளையும், போதனைகளைப் பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கவும் உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து உலகநாடுகளில் அம்பேத்கர் சிலைகள், வால்வர்ஹாம்ப்டன், இங்கிலாந்து- கொலம்பியா பல்கலைக்கழகம், அமெரிக்கா- சஜோக,ஹங்கேரி - கொயாசன் பல்கலைக்கழகம், ஜப்பான்- சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.