கடலூர் புதுநகர் பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சுதந்திரப் போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாதவரும், ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிவாகப் போராடியவருமான அஞ்சலையம்மாள், வயிற்றில் கருவைச் சுமந்து போராடி சிறை சென்றார். பின்பு ஜாமீனில் வெளியே வந்து பிரசவத்தை முடித்துவிட்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கைக்குழந்தையுடன் சிறைச் சென்றார். கடலூரில் மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் கைது செய்துவிடாமல் தடுத்து காப்பாற்றினார் அஞ்சலையம்மாள். அதற்காக அவருக்குத் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தி பட்டம் கொடுத்தார்.
இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கடலூர் புதுநகர் பூங்காவில் உள்ள சிலையைத் திறந்து வைத்தார். சிலை திறப்பு நிகழ்ச்சியில் கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அஞ்சலையம்மாளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.