Skip to main content

கலாஷேத்ரா இயக்குநரிடம் மாநில மகளிர் ஆணையம் விசாரணை

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

nn

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31ஆம் தேதி இந்தப் புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. அதன்பின் மாணவிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.

 

கலாஷேத்ரா கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு படித்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட மாணவிகளுடன் நேரடியாக விசாரணை நடத்தி புகாரின் உண்மைத் தன்மையை உறுதி செய்தனர். தொடர்ந்து மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரி பத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான ஹரி பத்மனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஹரி பத்மனை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

 

கடந்த 31ஆம் தேதி கலாஷேத்ரா கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்ட மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, ‘மாணவிகளிடம் மட்டும் விசாரணை நடத்தியதாகவும் கல்லூரியின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்கள் அன்று இல்லாததால் மீண்டும் விசாரணை நடத்துவேன்’ எனத் தெரிவித்திருந்தார். தற்போது ஹரி பத்மன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்