சென்னை மேற்கு முகப்பேர் அருகாமையில் உள்ள நொளம்பூர் பகுதியில், மதுரவாயலில் இருந்து திருப்பதி செல்லும் பைபாஸ் சாலையின் மேம்பாலத்தின் கீழ், இரண்டு பக்கமும் 3 அடி அகலத்தில், 12 அடி ஆழமுடைய சாக்கடை கால்வாய் உள்ளது.
துணிக்கடைக்குச் சென்றுவிட்டு அந்த வழியாக இரவு நேரத்தில் பைக்கில் வீடு திரும்பியபோது சரியாக, மூடப்படாத கழிவுநீர்க் கால்வாயில், கரோலின் பிரசில்லாவும், அவரது மகளும், தவறி விழுந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறுகையில், இது மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் விபத்து நடந்துகொண்டே இருக்கிறது. இது வரையிலும் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அப்போதும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து நடக்காத வகையில், மின் விளக்கு கூட அமைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் இங்கு, பல கொலைகளும் நடந்துள்ளது.
அதில் முக்கியமாக கை, கால் தனித்தனியாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் வீசிய சம்பவமும் இங்குதான் அரங்கேறியது. இதுபோன்ற சம்பவம் எப்போதும் இப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில்தான், இச்செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து மூன்று வாரங்களில், விளக்கம் அளிக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.