தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரின் முன்னாள் கணவரான தமிழகத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கடந்த 21 ஆம் தேதி அவரின் நண்பர்களுடன் பீலா வெங்கடேசனின் பண்ணை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா வெங்கடேசன் இது குறித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார், ராஜேஷ் தாஸ் மீது கொலை மிரட்டல், சட்ட விரோதமாகக் கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டில் கடந்த 20 ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பீலா வெங்கடேசன் தமிழக அரசின் எரிசக்தித் துறையின் முதன்மை செயலாளராக இருப்பதால் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ராஜேஷ் தாஸ் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே சமயம் ராஜேஷ் தாஸ் வசித்து வரும் வீட்டின் மின் இணைப்பு பதிவு பீலா வெங்கடேசன் பெயரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தற்போது அவர் மின் இணைப்பு வேண்டாம் எனக் கூறி அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வீட்டுக் காவலாளியைத் தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கேளம்பாக்கம் போலீசாரால் இன்று (24.05.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரை கேளம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து கிட்டத்தட்ட 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. காவலர்களிடமே மிரட்டும் தொனியில் அவர் பேசியதாக கூடுதலாக 353 என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது.தொடர்ந்து அவர் காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராவகதற்காக நீதிமன்றத்திற்குள் சிரித்த முகத்துடன் சென்ற ராஜேஷ் தாஸ் இறுதி நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனடியாக வெளியில் கைத்தாங்கலாக அழைத்து வந்த காவல்துறையினர் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி. பின்னர் நீதிமன்ற பிணையில் ராஜேஷ் தாஸ் விடுவிக்கப்பட்டார்.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவல் கண்காணிப்பாளருக்குக் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சிக்கியவர் ராஜேஷ் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.