வேலூர் காகிதப்பட்டறையில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயது முதல் 21 வயது உடையோர் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது முப்பது பேர் உள்ள நிலையில் இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளதாகத் தகவல். தப்பியோடி அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வழக்கம்போல இன்று மாலை வேளையில் இளம் சிறார்கள் பாதுகாப்பு இடத்தில் உள்ள கலியான இடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்சிறார் மற்றும் கோவையைச் சேர்ந்த 18 வயது இளம் சிறார் ஆகிய இருவரும் சுவர் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அரசினர் பாதுகாப்பு இடத்தின் கண்காணிப்பாளர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு இடத்தில் விசாரணை நடத்தினர்.
மேலும் தப்பியோடிய இரு இளம் சிறார்களைப் பிடிக்க வேலூர் புதிய பேருந்து நிலையம், வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து 6 பேர் தப்பியோடி மீண்டும் பிடித்துப் பாதுகாப்பு இடத்தில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.