Skip to main content

மாநில எல்லை மூடல்... தமிழக - கேரள போலீசார் வாக்குவாதம்

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கொடூர கரோனாவின் தாக்கம் கூடுதலாகலாம் என்பதால் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக தமிழகத்தின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மூன்று மாநிலங்களின் எல்லைகள் மார்ச் 31 வரை மூடப்பட்டன.
 

பயணிகளின் நலன் பொருட்டு அந்தந்த மாநிலங்களிலிருந்து குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். பால், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள், போன்ற அத்யாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்குத் தடையில்லை. இவைகள் தவிர்த்து இதர போக்குவரத்து வாகனங்கள் சென்று வர தடை என்று அரசு மார்ச் 21 அன்று அறிவித்த மறுகணமே தமிழகத்தின் எல்லைப்புறங்கள் மூடப்பட்டன. காரணம் கொரோனாவின் தாக்கம் கேரளாவில் கூடுதலான ரேஞ்சுக்குப் போனதுதான்.

 

 border



தடைகள் உடனடி நடைமுறைக்கு வந்ததால், குறிப்பாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை செக்போஸ்டில் கேரளாவிலிருந்து வருகிற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. எல்லைப் புறத்திற்கு போலீஸ் படையுடன் வந்த தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், அத்யாவசியப் பொருட்களின் வாகனங்களை மட்டுமே கேரளாவிற்கு அனுப்பி வைத்தவர், கேரளாவிலிருந்து வந்த இதர வாகனங்களைத் திருப்பி அனுப்ப, அந்த வாகனங்கள் கேரளாவின் எல்லையான ஆரியங்காவு கோட்டைவாசல் வந்த போது நெருக்கடியானது. அத்துடன் அந்தப் பகுதியில் கயிறு கட்டித் தடுப்புகளை ஏற்படுத்திய தமிழக போலீசார் கேரளாவிலிருந்து டூவீலரில் வந்தவர்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கேரள ஆரியங்காவு பகுதி பதற்றத்துடன் பரபரப்பானது. போலீஸ் மைக் மூலம் வந்த தகவலால் அந்தப் பகுதிக்கு விரைந்திருக்கிறார் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்.
 

கூட்டம் அதிகமாகிப் ப்ளாக் ஆன நிலையில் அங்கு வந்த கேரளாவின் பார்டர் பகுதி ஆரியங்காவு பஞ். தலைவரான பிரதீப், டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணனிடம் போய், பைக்கில் வந்தவர்களை தமிழகத்திற்கள் போக அனுமதியுங்கள் என்று சொல்ல.
 

கடுப்பான டி.எஸ்.பி, கரோனா பிரச்சனை உத்தரவு. நீ யார்ய்யா அவங்கள அனுமதிக்க சொல்றது என்றதும்
 

நான் இங்த ஊர் பஞ். தலைவர். மக்கள் ரெப்ரஷன்டேட்டிவ். நான் சொல்லாம, பின்னே யார் பேசுவா. முதல்ல அவங்கள அனுமதியுங்க என்று பிரதீப் குரலை உயர்ந்த, வாக்குவாதம் மூண்டது. பின்பு அவரை அடக்கிய டி.எஸ்.பி.
 

மறுத்துவிட்டு.. மொதல்ல நீ, எடத்தக் காலிபண்ணிட்டுப் போ.. என்று அவரைப் போலீஸ் உதவியுடன் அப்புறப்படுத்தியிருக்கிறார்.
 

எல்லைப் புறமான கேரளாவின் தென்மலை எஸ்.எஸ்.ஐ மணிகண்டன் போலீஸ் படையுடன் ஸ்பாட்டுக்கு வந்தவர் ஸ்பாட்டிலிருப்பது தமிழகத்தின் டி.எஸ்.பி. எஸ்.ஐ.க்கும் மேலான உயர் அதிகாரி என்று தெரிந்தும், இயல்பாக கீழ் அதிகாரி, உயர் போலீஸ் அதிகாரிக்குத் தரவேண்டிய மரியாதையைத் தராத எஸ்.எஸ்.ஐ. யான மணிகண்டன் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணனுக்கு முறைப்படி சல்யூட் செய்யாமல், வந்த வேகத்தில்.

 

நீங்கள் எப்படி எங்கள் எல்லைக்குள் வரலாம் என்று கத்தியிருக்கிறார். அவரோடு அந்தப் பகுதியினரும் சேர்ந்து கூச்சலிட்டனர்.
 

தொடர்ந்து முன்னேறிய எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன், தமிழக போலீஸ் கட்டியிருந்த தடைக் கயிற்றை அகற்றி டூவீலரில் வந்தவர்களை தமிழகம் செல்ல அனுமதித்த போது பதைபதைப்போடு மறித்த டி.எஸ்.பி. அவர்களுக்குக் கரோனா தொற்று உள்ளதா, சோதனையிட உத்தரவு. அவர்களை அனுமதிக்க மாட்டேன் என்று தடுத்திருக்கிறார்.
 

நீங்கள் அனுமதிக்கலைன்னா, தமிழகத்திலிருந்து. நீங்க அனுப்பிச்ச வண்டிகளைத் திருப்பி அனுப்புவேன். என எஸ்.எஸ்.ஐ. தன் தெனாவெட்டைக் காட்டினார்.
 

அப்படி நீ திருப்புன, ஒங்களுக்குச் சாப்புடுவதற்கு தமிழ்நாட்டிலருந்துதான காய்கறிக வரணும். அத நா நிப்பாட்டிட்டா. நீங்க பட்டினி கெடக்கனும். யோசிச்சுப் பார்யா. என்று டி.எஸ்.பி, எஸ்.எஸ்.ஐ.யை அதட்ட..
 

நிப்பாட்டிப் பாருங்க என்று, பதிலுக்குக் குரலை உயர்த்தி சேலன்ஜ் செய்திருக்கிறார் எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன்.
 

இருமாநில போலீசார் மற்றும் மக்களின் டென்ஷன் பற்றிய தகவல், அவரவர் மாநில உயரதிகாரிகளுக்குப் பறக்க, பின்னரே அவர்களுக்கானத் தகவல் போலீஸ் மைக்கில் பறந்தது.
 

இறுதியாக கேரள போலீஸ் படையிடம் வார்னிங்காகப் பேசிய டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்.
 

அரசு உத்தரவுப்படிதான் செயல்பட வேண்டும். எந்த விதமான வகைகளை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் மீறினால் அது இரண்டு மாநிலப் பிரச்சனையாகிவிடும் என்று எச்சரித்த பிறகே, கேரள எஸ்.எஸ்.ஐ மணிகண்டனின் போலீஸ் படை பின்வாங்கியது.

 

 

சார்ந்த செய்திகள்