"தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. நாளை மறுநாள்தான் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவித்த நிலையில் முன்கூட்டியே உருவானது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை மறுநாள் (23/11/2020) முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 24, 25 ஆம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, காரைக்காலில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் நவம்பர் 25- ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும்" இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.