கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவ்வப்போது சில தளர்வுகளுடன் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பேருந்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களின் அன்றாடப் பணிகளும் முடங்கி இருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர்களின் உரிமத்தை புத்தாக்க பயிற்சியுடன் புதுப்பித்து வழங்க சிறப்பு முகாம் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளித்து, உரிமத்தை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கூறினர்.
மேலும், புத்தாக்க பயிற்சியின்போது கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்று புத்தாக்க பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து வழங்கலாம் என்றும் போக்குவரத்துத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.