தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது சுமார் 12 ஆயிரம் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 57 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில் மாநகராட்சிகளில் வாக்கு சதவீதம் மிக குறைவாக பதிவானது. குறிப்பாக சென்னையில் வாக்கு சதவீதம் என்பது மிகக்குறைவாக பதிவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பதிவான வாக்குகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் கரோனா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பும் எற்படுத்தப்பட்டுள்ளது. காலை எட்டு மணிக்கு துவங்கி இந்த வாக்கு எண்ணிக்கையில் முதல்கட்டமாக தபால் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், பிரதான கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆவலோடு காத்துள்ளார்கள். இன்னும் சில நிமிடங்களில் முன்னணி நிலவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.