"மின்னல் வேகத்தில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என பாரத் எலக்ட்ரானிக்ஸ் டெக்னிசியன் அசோசியேஷனின் அகில இந்தியத் தலைவர் பெர்னான்ட் கூறியுள்ளார்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் டெக்னிசியன் அசோசியேஷன் சார்பில் அகில இந்திய மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் முதலாவது பொதுக்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் பெர்னான்ட், மாநிலச் செயலாளர் சசன்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சங்க வளர்ச்சி குறித்துப் பேசினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அகில இந்தியத் தலைவர் பெர்னான்ட், "அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய தொழிலாளர்கள் நலன் கருதி, தொழிலளார் நலவாரியம் மற்றும் ஒரு துறையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களுக்கு மின்சாரத்திற்கான மானியம் மற்றும் மின்சார சலுகைகள் வழங்க வேண்டும்.
மின்னல்போல உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பேரிடர் காலத்தில் பயனாளர்களின் வீட்டிற்குச் சென்று எலக்ட்ரானிக் சேவை செய்வது கடினமாக உள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் ஊதியத்தை உயர்த்தி வாங்க முடியாது, ஆகையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.