இந்தியாவில் இதுவரை மனிதகுலம் காணாத வகையில் ஒரு அச்சமும் உயிர் பயமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றால் அது இந்த கரோனா வைரஸ் தாக்கம்தான். எங்கே எப்போது யாருக்கு வருமோ என்ற அச்ச உணர்வு சாதாரண மக்கள் மத்தியிலும் பரவியுள்ளது. 21 நாள்கள் மக்களில் தங்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க வேண்டுமென ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான 2 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் இரண்டு பேருமே தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களால் தான் இந்த ஈரோடு பகுதியில் கரோனா வைரஸ் தாக்கம் பரவியிருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்பி சக்தி கணேசன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் திருமதி சவுண்டம்மாள் ஆகியோரும் கலந்துகொண்டு இந்த வைரஸ் நோய் தாக்கம் பற்றிய ஆலோசனைகளை நடத்தினார்கள்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமருங்கள் என கூறினார். அவர் கூறியது போலவே இருக்கைகள் அமைக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய ஆபத்து, இதை நமது மாவட்டத்தில் இருந்தும் மாநிலத்தில் இருந்தும் விரட்டுவதற்கு அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவர் தற்போது ஓரளவு குணம் அடைந்து வருவதாகவும் கூறப்பட்டது.