
தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில், இன்று (07-04-05) காலை 7 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
குறிப்பாக, சென்னை சிஐடி காலணியில் வசிக்கக்கூடிய அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி காலணி, எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 10க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, அமைச்சர் நேருவின் மற்றொரு சகோதரர் மணிவண்ணன், சகோதரி உமா ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதே போல், அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பியுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்திலும் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டபேரவையில், மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றி வரும் நிலையில், அவர் வீடு மற்றும் அவரது குடும்பத்தினர் இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.