சென்னையில் குடிபோதையில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு கரோனாவை காரணம்காட்டி, முதலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூன்.30-ஆம் தேதி சென்னை, மகாகவி பாரதி நகர் குடியிருப்பு 19ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஸ்டெல்லா(57). இவரது மகன்கள் ஜான்சன்(36), ஜான்(33) திருமணமாகாத இவர்கள், குடிபோதைக்கு அடிமையான இருவரும் வேலை வெட்டிக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த ஜூன் 28 ஆம் தேதி, இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் தனது சகோதரன் ஜானின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜானின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்டெல்லா ஓடிவந்து பார்த்தபோது, ஜான் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்ட அவர், கூச்சலிட்ட தைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 108 அவசர ஊர்தியின் உதவியோடு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வயிற்றில் தையல் போட்டு முதலுதவி சிகிச்சை அளித்த, மருத்துவர்கள் கரோனா நோயாளிகள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை காரணம்காட்டி மேற்படி சிகிச்சைகாக ஜானை அனுமதிக்காமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மறுநாள் பார்த்தபோது சிகிச்சை பலனின்றி ஜான் தனது வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல் கரோனா நோயாளிகளை காரணம் காட்டி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியதால் ஜான் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே குடிபோதையில் தனது சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஜான்சனை கைது செய்த எம்கேபி நகர் காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதேபோல கரோனாவை காரணம் காட்டி பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் தவிர்த்துவருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ. ரமேஷை தொடர்புக்கொண்டோம், “அந்த மாதிரியெல்லாம் இல்லை, அப்படி அவர் இறந்திருந்தால் இங்கு மருத்துவம் பார்த்த ஓ.பி. சீட்டை எடுத்துவரவும்'' என்று அலட்சியமாக தொடர்பை துண்டித்தார்.