திராவிட மாடல் அரசு தான் இந்தியாவிற்கே வழிகாட்டும் அரசாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு முடிவடைந்த பல திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிதாக தொடங்க இருக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார். இந்நிலையில், இன்று ஈரோடு பெருந்துறையில் 261.57 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் மற்றும் 183.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். ஈரோட்டில் 2 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். ஈரோடு மாநகராட்சியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் சில மாதங்களில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். நம் திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டும் அரசாக இருக்கிறது.
இட ஒதுக்கீடு குறித்த நமது சமூக நீதி தத்துவத்தை பல்வேறு மாநிலங்களும் பின்பற்றி வருகிறது. மாநில சுய ஆட்சி தத்துவம் மற்ற மாநிலங்களுக்கு திராவிட இயக்கம் கொடுத்த கொடை. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களின் முன்னேற்றம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம். தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் தான் அதிகம். அனைத்து மாவட்டமும் அனைத்து சமூகமும் சேர்ந்து வளர்வதுதான் வளர்ச்சி. நான் வாழும் காலத்தில் 'தமிழகத்தை நலமும் வளமும் பெற்ற மாநிலமாக மாற்றியிருக்கிறேன்' எனப் பெயரெடுக்கவே உழைத்து வருகிறேன் " எனக் கூறினார்.