லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இத்திரைப்படத்தின் டிரைலர் காட்சியைக் காண நேற்று ரோகிணி திரையரங்கில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அங்கு விஜய் ரசிகர்கள் அதிகமாக குவிந்தனர். அப்பொழுது திரையரங்கின் நாற்காலிகளை சேதப்படுத்தி உள்ளனர். நாற்காலிகளின் பஞ்சு உறைகள் கிழிக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட நாற்காலிகள் சேதமடைந்ததாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலாளர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறையின் பேரிகார்டுகள் நொறுக்கப்பட்டது. ரசிகர்களின் காலணிகள், பள்ளி புத்தகங்கள் போன்றவை திரையரங்க வளாகத்திற்கு உள்ளேயே கிடக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்துவதற்கு சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனுமதிக்க கோரி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, கடந்த மாதம் கொடுத்த கோரிக்கை மனுவை இதுவரை ஏற்கப்படவில்லை என வாதிட்டார். அப்பொழுது காவல்துறை தரப்பில் அவர்கள் பேரணிக்கு அனுமதிகோரும் பாதையில் தேவாலயங்கள், மசூதிகள், அரசியல் கட்சி அலுவலகங்கள் இருக்கிறது. எனவே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், 'அப்படி என்றால் அந்த பகுதியில் யாரும் நடமாட கூடாதா' என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து விரிவாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதேசமயம் இதுபோன்ற விவகாரங்களில் தடை விதிக்காமல் கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உத்தரவாதம் பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கலாம் என அறிவுறுத்திய நீதிபதி, லியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா ரோகிணி திரையரங்கில் நடத்தப்பட்ட போது ஏற்பட்ட சேதத்திற்கும், அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதற்கும் காவல்துறையின் தவறான கையாளுதலே காரணம். ரோகிணி திரையரங்கில் இவ்வளவு பிரச்சனையா? பார்க்கிங்கில் ஸ்கிரீன் வைத்து ட்ரைலர் ஒளிபரப்பு செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என நீதிபதி அதிருப்தியை பதிவு செய்தார்.
இதையடுத்து அங்கு ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ரோகிணி திரையரங்கத்தில் லியோ ட்ரெய்லர் வெளியிடுவது தொடர்பாக எந்த அனுமதியும் கோரி விண்ணப்பிக்கப்படவில்லை. அனுமதி கேட்டிருந்தால் முறையாக பரீசிலிக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை காவல்துறை எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.. அதைத் தொடர்ந்து நீதிபதி, 'சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் அனுமதி கோரும் மனுக்களை நிராகரிக்கக் கூடாது' என கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.