அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்த ஆர்ப்பாட்டத்தில் மைக் பிடித்த ராஜேந்திரபாலாஜி, “நாம் அத்தனை பேரும் அ.தி.மு.க. விசுவாசிகள். இந்த இயக்கத்தைப் பாதுகாக்க எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். சோதனை என்பது அதிமுகவுக்கு புதிதல்ல. அ.தி.மு.க. மீண்டும் வெற்றிநடை போடும். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்தோம். திருமங்கலம் இடைத்தேர்தலிலும் டெபாசிட்டை இழந்தோம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். ஆனாலும், ஜெயலலிதா இருந்தபோது மிருக பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தோம்.
1996- ல் மிகப்பெரிய தோல்வியை கழகம் சந்தித்தது. அப்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் வெற்றி பெற்றார்கள். அதில் இரண்டு பேர் போய்விட்டார்கள். ஆனால், 1998- ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கின்ற அளவிற்கு அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் ஜெயலலிதா இருந்தார். அந்த அளவுக்கு நமது வெற்றி இருந்தது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தில் தோல்வி என்பது புதிதல்ல. அதேநேரத்தில், வெற்றிச் சரித்திரமும் படைத்திருக்கிறோம். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அ.தி.மு.க. தொண்டர்கள் தோல்வியைக் கண்டு என்றும் துவண்டு போனது கிடையாது. வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியில் மிதந்து போனதும் கிடையாது. வெற்றியும் தோல்வியும் சகஜம்தான்.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒரு முடிவு வந்திருக்கலாம். ஆனால், அடுத்து நடைபெறும் தேர்தல்களில் எல்லாம் அப்படியே அமையுமா என்று கூறமுடியாது. எத்தனையோ தேர்தல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 2006- ல் மிகப்பெரிய தோல்வியை அ.தி.மு.க. சந்தித்தது. 2011-ல் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றது. அ.தி.மு.க.விற்குத்தான் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட பெருமை உண்டு. இன்று தனித்து நின்று இவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால், அ.தி.மு.க. வாக்கு வங்கி அப்படியே உள்ளது. யாருக்கும் அதிமுக வாக்குகள் போகவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் நிலைகுலையாமல் இருப்பது கண்டு ஆளும் கட்சியினர் திகைத்துப் போயுள்ளனர். அந்த அளவிற்கு ஒரு வலிமையான தொண்டர்கள் இருக்கும் இயக்கம் அ.தி.மு.க” என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க. அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.