Skip to main content

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கு; காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

SSI Bhuminathan case DGP praises police officers

 

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.யாகப் பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நள்ளிரவில், நவல்பட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தி உள்ளார். அப்போது வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். மேலும் அவர்கள் ஆடுகளைத் திருடும் கும்பலைச் சேர்த்தவர்கள் என்பதனைத் தெரிந்துகொண்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன், அவர்களை விரட்டிச் சென்றுள்ளார்.

 

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்றபோது, இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்திய எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன், அதிலிருந்த 3 திருடர்களைப் பிடித்தார். ஆனால் அவரது பிடியிலிருந்து தப்ப முயன்றவர்கள், பூமிநாதனை அரிவாளால் வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய ஆனந்த் அதிரடி தீர்ப்பைக் கடந்த 29 ஆம் தேதி வழங்கி இருந்தார். இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த 6 காவல் அதிகாரிகளுக்குத் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார். காவலர்கள் 6 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். அதே சமயம் இதில் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் சிறுவர்கள் என்பதால் இவர்கள் மீதான வழக்கு விசாரணை, இளைஞர் நீதி குழுமத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்