திருவண்ணாமலை நகரத்தின் பல்வேறு பகுதியில் திருட்டு, வழிப்பறி ஆகிய சம்பவங்கள் நடந்துவருகின்றன.
திருவண்ணாமலை நகரம் வானவில் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 65 வயது முதியவரான இவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வங்கி கணக்கு வேங்கிக்கால் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் உள்ளது. வங்கியிலுள்ள தனது சேமிப்பு கணக்கிலிருந்து 2 லட்ச ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் கிருஷ்ணமூர்த்தி. வங்கி வாசலில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தின் முன்பு இரண்டு லட்ச ரூபாய் பணமிருந்த மஞ்சப்பையை மாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்ப வண்டியை தள்ளுகிறார். இதனை வங்கி முன்பு சாலையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர் இருவர்.
இருவரில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தியின் இருசக்கர வாகனத்தின் அருகே வந்து, 100 ரூபாய் தாளை கீழே போட்டவர், கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கீழே பணம் இருப்பதாக கூறுகிறார். கிருஷ்ணமூர்த்தி இரண்டு லட்ச ரூபாய் இருப்பதை மறந்து வண்டியை நிறுத்திவிட்டு கீழே கிடந்த 100 ரூபாயை எடுக்கச்செல்கிறார். 100 ரூபாய் தாளை கீழே போட்டவர், கிருஷ்ணமூர்த்தி வண்டியில் மாட்டியிருந்த பணமிருந்த பையை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று இருசக்கர வாகனத்தில் காத்திருந்த கூட்டாளியின் வண்டியில் ஏறி செல்வது வங்கி வாசலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 100 ரூபாயை ஆசையாக எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் அருகே வந்தபோது பணம் இருந்த பை திருடுபோனதைப் பார்த்து அதிர்ச்சியாகி வங்கி முன்பே கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் தந்துவிட்டு கண்ணீரோடு காத்துக்கொண்டுள்ளார்.
வார இறுதி நாட்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அண்ணாமலையார் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருவண்ணாமலை வந்து கிரிவலம் செல்கின்றனர். கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மாலை, ஆந்திராவை சேர்ந்த இருபெண்கள் கிரிவலம் வந்தனர். போளூர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அப்பெண்களிடமிருந்து கழுத்திலிருந்து தங்கசெயினை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர்.
அதேபோல் இன்று காலை மத்தலாங்குளத்தெருவில் கடைக்கு வெளியே நிறுத்திவைத்திருந்த ஸ்கூட்டி வாகனத்தை ஒரு இளைஞரின் வாகனம் திருடு போயுள்ளது. வண்டி உரிமையாளர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு இளைஞர் அந்த வண்டியை எடுத்து செல்வதும், அந்த வண்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள போக்குவரத்து சிக்னலில் சாகவாசமாக நிற்பதும் தெரியவந்துள்ளது.
வங்கி வாசலில் பட்ட பகலில் கவனத்தை திசை திருப்பி திருட்டு, கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்த பகல் பொழுதில் பெண்களின் கழுத்திலிருந்து தங்கசெயின் பறித்து சென்ற திருடன், காலை நேரத்தில் கடைக்கு வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டு என தொடர்ச்சியாக திருவண்ணாமலை நகரில் திருட்டுகள் பட்டப்பகலில் நடப்பது ஆன்மீக நகரம் திருடர்களின் நகரமாகிறதோ என அச்சப்படுகின்றனர் பொதுமக்கள்.