சென்னையில் வாகனங்களின் வேகங்களுக்கான வரம்புகளை நிர்ணயம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி சென்னையில் ஆட்டோக்கள் காலை முதல் இரவு 10 மணி வரை 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 35 கிலோமீட்டர் வேகத்தில் ஆட்டோக்கள் செல்லலாம். கனரக வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இலகு ரக வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என அதிகாரப்பூர்வமான தகவலை சென்னை காவல்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 62.5 லட்சம் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு சென்னையில் இயங்கி வரும் நிலையில் அதன் அடிப்படையில் விபத்துகளை குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நேற்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவிலேயே விபத்துகளை தடுக்கும் இடங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் நவ. 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.