தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் துவங்க உள்ளதையடுத்து வாக்காளர்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள அரசு பல கட்ட முகாம்களை நடத்திவருகிறது. அதன்மூலம் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் நிலை குறித்து அறிந்து, அதில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழைதிருத்தங்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டுள்ள வாக்காளர்களை நீக்குதல், உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நேற்று வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டுச் சென்றனர். அதில் தி.மு.க.வின் முதன்மை செயலாளர் கே.என். நேரு, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, கிராப்பட்டி லிட்டில் ஃபளவர் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களைப் பார்வையிட்டார். மேலும் அ.தி.மு.க. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், கருமண்டபம், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதுர், காஜாமலை, உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும் அ.தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் பா.குமார், திருவெறும்பூர் பகுதியில் உள்ள வேங்கூர் கிராமத்தில் நடைபெற்ற முகாம்களைப் பார்வையிட்டார்.