
சென்னை எழும்பூர் பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு சத்ய நாராயணன் என்பவர் உணவு சாப்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் (11-10-23) வந்துள்ளார். அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தை ஹோட்டல் பார்க்கிங் நிறுத்தத்தில் நிறுத்தி, அதில் தனது ஹெல்மெட்டை வைத்து விட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு, சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த தனது ஹெல்மெட் இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகமும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், காக்கி சட்டை அணிந்திருந்த போலீஸார் ஒருவர் ஹெல்மெட்டை திருடிய காட்சி பதிவாகியிருந்தது.
மேலும், காவல்துறையினர் விசாரணையில், எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயன் என்பவர் தான் ஹெல்மெட்டை திருடியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயனிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெல்மெட்டை திருடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.