புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பர்மிட் இல்லாமல் மண், மணல், கிராவல் மண் ஆகியவை இரவு பகலாக ஏற்றிச் செல்லப்படுகிறது. இது போன்ற புகார்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை போலீசாரை நியமித்து கண்காணிக்கச் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை உதவி ஆய்வாளர் நாமிக் இப்ராகிம் தலைமையிலான தனிப்படை போலீசார் வடகாடு பகுதியில் கண்காணிப்பில் இருந்த போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த 2 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது பர்மிட் இருப்பதாக காட்டியுள்ளனர். போலீசார் அந்த பர்மிட்களை ஆய்வு செய்து போது சந்தேகம் எழுந்ததால் பர்மிட்களின் கார்பன் நகலை கொண்டுவரச் சொல்லி ஆய்வு செய்த போது கார்பன் நகலில் பேனாவில் தேதிகள் திருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
போலி பர்மிட் வைத்துக் கொண்டு கிராவல்மண் ஏற்றிச் சென்ற 2 டாரஸ் லாரிகளையும் வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனிப்படை போலீசார் லாரி ஓட்டுநர்களான வாழமங்கலம் அழகன் மகன் பழனி (வயது 31), அறந்தாங்கி புதுக்கோட்டை ரோடு செல்வராஜ் மகன் சரவணன் (வயது 38) ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை செய்த வடகாடு போலீசார் போலி பர்மிட்டுகளுடன் கிராவல் மண் ஏற்றிச் சென்ற அறந்தாங்கியைச் சேர்ந்த 2 டாரஸ் லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதே போல கடந்த வாரம் கீரமங்கலம் பகுதியில் பர்மிட் இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்ற ஆலங்குடியை சேர்ந்த ஒரு டாரஸ் லாரியை தனிப்படை போலீசார் பிடித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.