சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் வசிக்கும் ராஜேஷ் கண்ணன் - கண்ணகி தம்பதியின் மகன் சுகன் வயது 20. இவர் 70 சதவீத மாற்றுத்திறனாளி. இவரை சிதம்பரம் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்த மணி, அண்ணாமலை நகர் மண் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரும் வேலைக்கு அழைத்துச் சென்று கூலி கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர். பின்னர் சுதன் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிய போது வீட்டிற்குப் போக விடாமல் அவரது உடலில் முதுகு, கால் பாதம், நாக்கு உள்ளிட்ட பல இடங்களில் அயர்ன் பாக்ஸ் மூலம் சூடு வைத்துள்ளனர். மேலும் அவரது 6 பல்லை கொரடா மூலம் பிடுங்கியுள்ளனர்.
பின்னர் இவர் வெளியே செல்லாத வகையில் சிதம்பரம் மன்னார்குடி தெருவில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்த நிலையில் யாரும் இல்லாதபோது சுகன் புதன்கிழமை தப்பித்து வந்து உறவினரிடம் கூறியதன் பேரில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சிதம்பரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிதம்பரம் நகரத் தலைவர் அமுதா, மருத்துவமனையில் சுகனுக்கு ஆறுதல் கூறி காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளி, செய்த வேலைக்கு கூலி கேட்டபோது பல்லைப் பிடுங்கி அயர்ன் பாக்ஸ் கொண்டு சூடு வைத்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.