விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவர், பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை ரூ. 2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாகச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேஸ் குமார் யாதவ்க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு உயர் அதிகாரி தினகரன், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் சிலை கடத்தல் கும்பலுக்குச் சந்தேகம் ஏற்படாத வண்ணம் சிலையை மீட்க ஒரு செயல் திட்டம் வகுத்தனர்.
இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையில், ஆய்வாளர்கள் ரவீந்திரன், சத்தியபிரபா, உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ், மதன், ராமசாமி, தலைமைக் காவலர்கள் சக்திவேல் மற்றும் ரீகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினரை சிலை வாங்கும் நபர்களைப் போல புரோக்கர் பாலமுருகனை அணுகச் செய்தனர்.
புரோக்கர் பாலமுருகனின் நம்பிக்கையைப் பெற தனிப்படையினருக்கு பத்து நாட்களுக்கு மேல் ஆனது. இறுதியாக பாலமுருகன், அச்சிலையினை தனிப்படையினருக்குக் காட்ட ஒப்புக்கொண்டார். தனிப்படை அதிகாரிகள் சத்தியபிரியா மற்றும் ராஜேஸ் ஆகியோர் பாலமுருகனை காரியாபட்டியில் சந்தித்துப் பேசியபோது, அந்த மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பாக இரண்டு கோடி முடிவு செய்யப்பட்டது.
மேலும், தனிப்படையினர் பாலமுருகனிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவரது நண்பர் சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் மேலும் ஒரு விநாயகர் சிலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படையினர், அந்த சிலையையும் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், அதன் காரணமாக அவர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்று அந்த சிலையையும் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த பாலமுருகன் கடும் முயற்சிகளுக்குப் பின் சென்னை வர ஒப்புக்கொண்டார்.
அத்திட்டத்தின்படி இன்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ் மற்றும் ராமசாமி ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தனர். அப்போது பாலமுருகனும் அவரது நண்பர்களுமான அம்பத்தூரைச் சேர்ந்த பிரபாகரன் (40), விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகியோரும் ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையோடு அவ்விடத்திற்கு வந்தனர். பின்னர் மேற்கூறிய மூவரும் தனிப்படையினரும் ஒரு மறைவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய போது, அந்த விநாயகர் சிலைக்கு ரூபாய் 4 கோடி என மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
அப்போது காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா தனது தனிப்படை காவலர்களுடன் வந்து அம்மூன்று நபர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தார். மேலும், அவர்களிடமிருந்து மாணிக்க வாசகர் மற்றும் விநாயகர் சிலைகளையும் மீட்டார். இது தொடர்பாகப் பிடிபட்ட மூவரிடத்திலும் நடத்தப்பட்ட விசாரணையில், அவ்விரு சிலைகளும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறு அருகே உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இவ்விரு சிலைகளும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூபாய் 2 கோடிக்கு மேல் இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.