Skip to main content

இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்... !

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

Special buses throughout Tamil Nadu today and tomorrow ...!

 

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஊரடங்கை முன்னிட்டு இரவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு செல்ல ஏதுவாக சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. நாளை சென்னையிலிருந்து மதுரைக்கு கடைசி பேருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை சென்னையில் இருந்து திருச்சிக்கு கடைசிப் பேருந்து இரவு 11.45 க்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கு இரவு 8 மணிக்கும், தூத்துக்குடிக்கு இரவு 7 மணிக்கும் கடைசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து  சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி அவர்களது சொந்த ஊருக்கு பயணம் செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்