பக்ரீத் பண்டிகை வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வார இறுதியில் வருவதால் இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை முதல் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவிக்கையில், “பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.