மாணவியிடம் தகாத முறையில் பேசிய உடற்கல்வி ஆசிரியர் “சஸ்பென்ட்”
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் மவுலி (வயது-40). இவர், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இதை காரணமாக வைத்து, ஆசிரியர் மவுலி அடிக்கடி அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். இரு நாட்களாக, விடுமுறையில் இருந்த ஆசிரியர், நேற்று முன்தினம் மாலை, மாணவியின் சகோதரி மொபைலுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, மாணவியிடம் தகாத முறையில் பேசி, தன் வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதை கேட்ட, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று காலை, மல்லூர் மேல்நிலைப்பள்ளியை, மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, பள்ளிக்கு வந்த ஆசிரியர் மவுலியிடம் பேசும்போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின், தலைமையாசிரியர் கல்வி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மாணவியின் உறவினர்களை முதன்மை கல்வி அலுவலர் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள், சேலம் வந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் புகார் தெரிவித்தனர்.
விசாரித்த அவர், மவுலியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஞானகவுரி கூறுகையில், ''உறவினர்கள் அளித்த புகார்படி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதில், முழு விசாரணை நடத்தி, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனக் கூறியுள்ளார்.
சிவசுப்பிரமணியம்