"மனசு விட்டுப் பேசினால் தற்கொலை எண்ணத்தை அறவே இல்லாமல் அகற்றிவிடலாம்" என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும், புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு காணொளியை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டார்.
அந்த காணொளியில், "நம் வாழ்வில் சில நேரம் சலிப்பூட்டுதாக, வெறுயைமாக, நம்பிக்கையற்றதாக, அர்த்தமற்றதாகக் கூட தோன்றலாம். இந்த நேரங்களில் நமக்கு உதவி செய்ய யாருமே இல்லையே நாம ஏன் வாழனும் என்பது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். இந்த மாதிரியான நேரங்களில் தயவு செய்து தனிமையைத் தவிர்த்திடுங்கள். மற்றவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். உதவிகள் கேளுங்கள், உதவிகள் கேட்பது தவறில்லை. உதவி கேட்பது மனித இயல்பு, உதவி செய்வது மனித மாண்பு. மீண்டு வருவது மனிதச் சிறப்பு" என்று பல்வேறு படங்களுக்கு மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயம் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்த காணொளி வெளியீட்டிற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனால் ஒரு வாரகாலமாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில் மனக்கவலை நோயின் அறிகுறிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் போன்வற்றைக் கண்டறிந்து அவர்களைக் காப்பாற்றும் முறைகள் குறித்த விழிப்புணர்வு காணொளி வெளியிடப்பட்டுளளது" என்றார்.
மேலும், "104 -க்கு அழைத்தால் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் 104 எண்ணில் இருந்து தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது" என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சரவணன், ரம்யாதேவி, மாவட்ட மனநலதிட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.