கரோனாவை விட கொடிய நோய் வறுமை என்பதை ஆட்சியாளர்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்ற கோபம் மக்கள் மனதில் அனலாக கொதிக்கத் தொடங்கிவிட்டது. ஈரோடு மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கி விட்டனர். அப்படியொரு சம்பவம்தான் இது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டில் உள்ளது பெரிய அக்ரஹாரம் பூம்புகார் நகர். இங்கு ஏழை எளிய கூலி தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இப்போது கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தப் பகுதி மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உள்ளவர்கள் வெளியே செல்லவோ, வெளியாட்கள் இங்கு உள்ளே வரவோ அனுமதி இல்லை. இந்த நிலையில் சென்ற ஒரு மாதமாக அவர்களிடமுள்ள நிதியை வைத்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.
தற்போது அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும் சிரமப்படும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பால் இன்றி தவிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் இன்று அப்பகுதி மக்கள் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி பூம்புகார் நகர் வீதிக்கு வெளியே திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது,
''இங்கு யாருக்கோ ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாம் இதனால் இங்கு வந்த அதிகாரிகள் உங்க பகுதியே அபாயகரமானது, கரோனா பரவிவிட்டதுனு சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பு எங்க பகுதியை சீல் வைத்து நீங்க யாரும் வெளியே வரக்கூடாது. உங்களுக்கு தேவையானதையெல்லாம் வீடு தேடி கொண்டு வந்து கொடுப்போம்னு சொன்னாங்க. நாங்களும் பயந்துகிட்டு வீட்டிலேயே முடங்கி கெடந்தோம். ஆரம்பத்துல காய்கறி, உணவு பொருட்கள் கிடைத்ததை வாங்கினோம். அரசாங்கம் கொடுத்த ரேசன் அரிசி, ஆயிரம் ரூபா பணத்தோட சரி வேற எதுவுமே எங்களுக்கு கொடுக்கல, பச்ச குழந்தைகளுக்கு பால் வாங்கி கூட கொடுக்க வக்கில்ல, காசு, பணம் சுத்தமா இல்ல, நாங்க அன்றாடங்காய்ச்சிக, கூலி வேலைக்கு போனாத்தான் அந்தனைக்கு வீட்டுல அடுப்பு எரிக்க முடியும்.
இப்ப கூலி வேலையுமில்லே, வெளியில எங்கும் போக்க கூடாதுனு மிரட்டி வெச்சுருக்காங்க. கையில வேற தீவிரவாதி மாதிரி பச்ச குத்தீட்டாங்க.. ஒன்னு நாங்க மூனு நேரமும் சாப்பிட வழிவகை செய்து கொடுங்க இல்லைனா, இந்த சிறையில இருந்து வெளியே விடுங்க வெளியில போய் எங்காவது கடன் வாங்கியோ அல்லது பிச்சை எடுத்தோ பொழச்சுக்றோம், எப்ப பாத்தாலும் கரோனா, கரோனானு சொல்லிச் சொல்லியே பயமுறுத்தறாங்க,
ஐயா, சாமிகளா கரோனா வந்து செத்தாலும் பரவாயில்லே எங்க புள்ளைக, குழந்தைக, நாங்க பசியால வறுமையால சாக முடியாது. நாங்க இந்த அரசாங்கத்துகிட்டே பிச்சை கேட்கலே... நாங்களெல்லாம் உழைச்சு வாழ்ந்தவங்க, இனியும் உழைச்சுத் தான் வாழ்வோம். உழைக்க விடுங்க,... விதி வந்தா சாவு வந்துட்டு போவுது... இப்படியெங்கல பரிதவிக்க வெச்சுட்டாங்களே...." என கண்ணீரும் கதறுலுமாக கூறினார்கள்.
மக்கள் போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து பெரிய அக்கரஹாரம் கிராம நிர்வாக அலுவலர், மாநகராட்சி உதவி அணையாளர் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் எல்லோரும் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து நிவாரணமும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் சில நாட்கள் மட்டுமே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனக்குமுறல் நியாயம் தான் சரிசெய்கிறோம் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். எனினும் இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.