அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதிலிருந்து சனாதனம் குறித்த பேச்சுக்கள் பேசுபொருளாகியிருக்கிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில், மாணவர்கள் சனாதனத்தை எதிர்த்து கருத்துக்களைப் பேச வேண்டும் எனக் கல்லூரி முதல்வர் மாணவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சனாதன எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு ஒன்று திமுக சார்பில் நடைபெற இருக்கிறது. இதில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
இந்தநிலையில் திருவாரூரில் செயல்பட்டு வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜாராம் அனைத்து துறைத் தலைவர்களுக்கும், வகுப்பில் மாணவர்களிடம் வாசிக்கும்படி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் 'கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்கள் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று மாலை 3 மணி அளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.