வேலூர் மாவட்டம் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கே.மனோகரன்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவேரிப்பாக்கம் காவல் ஆய்வாளர் லட்சுமிபதி தலைமையிலான போலீஸ் படையுடன் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளாச்சேரி முட்புதர் மற்றும் மதகு அருகில் அக்டோபர் 14 ந்தேதி சோதனை நடத்தியதில் மேற்கண்ட இடங்களில் இருந்து 10 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் மொத்தம் 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்களான வெல்லம், மரப்பட்டைகள், பழங்கள், பவுடர்கள் கைப்பற்றப்பட்டு காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சும் கும்பல் எது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராயம் காய்ச்சும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.