நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் நிர்வாகியான காளியம்மாள் குறித்துப் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை வெளியிட்டது, திருச்சி எஸ்.பி வருண்குமார் என்ற ரீதியில் மறைமுகமாகச் சென்னையில் நேற்று நடந்த கண்டனக் கூட்டத்தில் சீமான் பேசியிருந்தார். மேலும் அந்த கூட்டத்தில் தமிழக காவல்துறை குறித்தும் சில கருத்துகளைக் கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக காவல்துறையை பொது மேடையில் அவதூறாக பேசியதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எஸ்.பி. வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், “நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவருடைய அனைத்து தவறான கருத்துகளுக்காக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடருவேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பொதுமேடையில் சீமான் பேசும் அற்பமான பொய் புனை சுருட்டுகளைப் பொதுமக்கள் கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.