தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையினர் வழக்கமான சட்டம்&ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், குற்றத்தின் ஊற்றுக்கண் வரை ஆராய்ந்து அவற்றை களைய வேண்டும் என்று ஏற்கனவே காவல்துறையினருக்கு தமிழக போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகம் ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகள் முதல் கடைநிலையில் உள்ள இரண்டாம் நிலைக்காவலர் வரை நேரடி தொடர்பில் இருப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளது. இதற்காக, ஒவ்வொரு காவல்நிலையமும் தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று புதன்கிழமையன்று (ஜனவரி 16) டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அந்தந்த காவல்நிலையத்தின் பெயரிலேயே வாட்ஸ்அப் குழுவின் பெயர் இருக்க வேண்டும்; குழுவின் அட்மின் ஆக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தின் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர்களில் யாராவது ஒருவர் இருக்கலாம். அந்தந்த காவல் சரக எல்லைக்குள் காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்பான பணிகளை உடனுக்குடன் வாட்ஸ்அப் குழுவில் பதிவேற்றம் செய்யும்படியும் டிஜிபி அலுவலக உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.