தமிழக பாஜகவில் அனைத்து பதவிகளும் விரைவில் காலியாகவிருக்கும் நிலையில், ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான இலக்கை பாஜக தலைமை நிர்ணயித்திருக்கிறது. பாஜகவில் மாநில தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் என ஏராளமான பதவிகள் இருக்கின்றன. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்த பதவிகள் மாற்றியமைக்கப்படும்.
அந்த வகையில், வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு மாநில தலைவர் பதவியைத் தவிர்த்து மற்ற அனைத்து நிலை பதவிகளும் காலியாகவிருக்கிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் யாரும் எந்த பதவியிலும் இல்லை என்று அர்த்தமாகும். இதனையடுத்து மீண்டும் கட்சி உருவாக்கி வைத்திருக்கும் பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவார்கள். அப்போது சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து அடுத்த நிலைக்குச் செல்வதுண்டு. சிலர் அதே பதவியில் மீண்டும் நியமிக்கப்படுவதும் உண்டு. அதேபோல, மீண்டும் பதவி வழங்காமல் தவிர்க்கப்பட்டு புதிய நபர்களுக்குப் பதவிகள் வழங்குவதும் நடக்கும்.
இந்த நடைமுறைகளும், மாற்றங்களும் நடப்பதற்கு முன்பு, தமிழக பாஜகவில் 1 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை இலக்காக வைத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்குப் பிறகு கிளைக்கழகம் முதல் மாவட்ட தலைமை வரை தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர். அல்லது தேர்ந்தெடுக்கப்படுவர். இதனையடுத்து மண்டல தலைவர்கள் நியமிக்கப்பட்டு அதன்பிறகு மாநில நிர்வாகிகள் நியமனம் நடக்கும். அந்த வகையில், பாஜக புதிய கட்டமைப்பைக் கட்டியெழுப்பத் தயாராகி வருகிறது.