தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதனையொட்டி தேசியத் தலைவர்கள் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதால் சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
இந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து சோனியா காந்தி சென்னை வந்துள்ள நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இட ஒதுக்கீடு விவகாரங்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் திமுக எம்.பி கொடுக்கும் மதிய விருந்தில் கலந்துகொண்டு, மாலை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.