![The son who beat his father to death ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/aa8TEK_HilWpyy7McQaQfa5LGw0Mj4WLJUVsVsu5D2A/1611308847/sites/default/files/inline-images/died-600x400.jpg)
கடலூர், முதுநகரிலுள்ள மோகன்சிங் தெருவில் வசிக்கும் பரசுராமன், தேவகி தம்பதியினருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகன் சக்திவேல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் நேற்று (21.01.2021) இரவு வீட்டில் இருந்த தனது தந்தையை அடித்து படுகொலை செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
இதுபற்றி அருகாமையில் இருந்த வீட்டினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்துவந்த கடலூர் முதுநகர் காவல்துறையினர், அவர் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மோகன்சிங் தெருவின் கடைசியில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த சக்திவேலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர், கஞ்சாவுக்கு அடிமையானவர் எனத் தெரியவருகிறது. இப்பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்வதாகவும், இப்பகுதி காவல்துறையினர் இதைக் கண்டுகொள்ளாததால், இதுபோன்று கொலை சம்பவங்கள் நடப்பதாகவும் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மகனே தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.